×

சங்கரன்கோவிலில் நாளை மறுதினம் முதல் பேருந்து நிலைய விரிவாக்க பணிக்காக தினசரி காய்கறி மார்க்கெட் இடமாற்றம்

*தற்காலிக வளாகத்தில் செயல்படும் என அறிவிப்பு

சங்கரன்கோவில் : சங்கரன்கோவில் பேருந்து நிலைய விரிவாக்க பணிக்காக நாளை மறுதினம் (12ம் தேதி) முதல் தினசரி காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுகிறது. சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக இப்பகுதியில் இயங்கி வந்த காந்தி தினசரி காய்கறி நாளங்காடியை தற்காலிக இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மார்க்கெட் சங்கத்தினர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நாளங்காடியை மாற்றுவதற்கு தடையாணை பெற்றனர். இதனால் நாளங்காடியை மாற்ற முடியாமல் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் தாமதமாக நடந்து வந்தது.

இந்நிலையில் தற்போது நீதிமன்றம் தினசரி காய்கறி நாளங்காடியை தற்காலிக இடத்துக்கு மாற்றி பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து தினசரி நாளங்காடி காய்கறி கடைகளுக்கு நகராட்சியின் கிழக்கு பகுதியில் புதிய வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் இன்னும் சில மாதங்களில் நிறைவடையும் நிலையில் உள்ளது. தற்போது பேருந்து நிலைய விரிவாக்க பணிகளுக்காக, தினசரி காய்கறி நாளங்காடி திருவேங்கடம் சாலையில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு மேற்கு பகுதியில் உள்ள தற்காலிகமாக நாளை மறுதினம் (12ம் தேதி) முதல் இடமாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து பேருந்து நிலைய விரிவாக்க பணிகள் விரைவாக முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னுரிமை அடிப்படையில் கடை ஒதுக்கீடு

காந்திஜி தினசரி காய்கறி நாளங்காடி சங்க தலைவர் கணேசன் கூறுகையில், ‘சங்கரன்கோவில் காய்கறி நாளங்காடி 50 ஆண்டுகள் பழமையானது. இங்கு தற்போது கடை வைத்திருப்பவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகளை ஒதுக்கும்போது ஏற்கனவே கடை வைத்துள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். குறைந்த முன்பணத்துடன் ஏற்கனவே கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கு கடைகளை வழங்க வேண்டும்’ என்றார்.

The post சங்கரன்கோவிலில் நாளை மறுதினம் முதல் பேருந்து நிலைய விரிவாக்க பணிக்காக தினசரி காய்கறி மார்க்கெட் இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Sankarankoil ,Dinakaran ,
× RELATED சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு